Tamil News

இன்று வெளியான சாமானியன்… கம்பேக் கொடுத்தாரா ராமராஜன்???

ஒரு காலத்தில் கிராமத்து நாயகனாக மக்களால் கொண்டாடப்பட்ட ராமராஜன் இடையில் நடிப்புக்கு பிரேக் எடுத்திருந்தார்.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாமானியன் படம் மூலம் அவர் கம்பேக் கொடுத்துள்ளார்.

ராகேஷ் இயக்கத்தில் ராமராஜனுடன் ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் அதிக கவனம் பெற்றது. படமும் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக இருக்கும் ராமராஜன் தன் நண்பர்களுடன் இணைந்து வங்கியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகிறார். அதை அடுத்து காவல்துறை வங்கியை சுற்றி வளைத்து மக்களை காப்பாற்ற போராடுகிறது.

இதற்கு இடையில் ராமராஜன் எதற்காக இதை செய்கிறார்? என்ற பிளாஷ்பேக்கும் விரிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? சாமானியனாக போலீசை ஆட்டுவிக்கும் ராமராஜனின் கோரிக்கை என்ன? என்பதுதான் படத்தின் கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனை திரையில் பார்ப்பதால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாகவே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் அவருடைய நடிப்பும் வசன உச்சரிப்பும் உள்ளது.

அதனாலேயே இப்படம் அவருக்கு ஒரு சிறந்த கம் பேக்காக இருக்கும். ஆனால் இனிமேலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் பவர்ஃபுல்லான கதாபாத்திரங்களில் அவர் நடித்தால் செகண்ட் இன்னிங்ஸ் சிறப்பாக இருக்கும்.

அடுத்ததாக திரைக்கதையை பொருத்தவரையில் ஆரம்பத்தில் மெதுவாக தான் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு கூடி இறுதியில் கலக்கலாக முடிந்துள்ளது. துணிவு பாணியில் இப்படம் இருந்தாலும் சாமானியன் சொல்லும் மெசேஜ் தேவையான ஒன்று.

இதற்கு அடுத்து இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. இப்படியாக ரசிகர்களை கவர்ந்துள்ள இப்படத்தை ராமராஜனுக்காக கட்டாயம் தியேட்டரில் ஒரு முறை பார்க்கலாம்.

Exit mobile version