Site icon Tamil News

அதிக வெப்ப நிலையுடனான காலநிலை மே இறுதிவரை நீடிக்கும் என அறிவித்தல்!

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக மனநலம் சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் தெரிவித்துள்ளார்.

குறித்த வெப்ப காலநிலையாது  மே மாத இறுதி வரை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  அதிக வெப்ப நிலை காரணமாக குறிப்பிட்ட சில நோய் நிலைமைகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக மனநலம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறான நோய்கள் ஏற்படும்போது மக்கள் வன்முறையை நோக்கி தூண்டப்படக்கூடும்.  வன்முறை எண்ணங்களால் வெவ்வேறு குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

வழமையான வெப்ப நிலையை விட ஒரு பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரிக்கும்போது மனநலம் தொடர்பான நோய் நிலைமைகள் 2 சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும்.

எனவே அதிகளவில் நீர் அருந்துதல்,  அநாவசியமாக வெயிலில் செல்வதை தவிர்த்துக்கொள்ளல் உள்ளிட்டவற்றை சகலரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

 

Exit mobile version