Tamil News

லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் உயிரிழப்பு ; 700-ஐ கடந்த பலி எண்ணிக்கை

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள் கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700க்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன.

கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது.

லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், பால்பெக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதை இஸ்ரேல் உளவுத் துறை கண்டறிந்ததையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து வருகிறது.

கடந்த அக்டோபர் தொடங்கி காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 16,500 குழந்தைகள் உள்பட 41,467 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளர். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கி 4 நாட்களில் இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டுமே 92 பேர் பலியாகினர்.

Israel-Hamas war latest: Israeli airstrikes in Lebanon have killed nearly  700 this week | AP News

இஸ்ரேல் காசாவில் தொடங்கி தனது தாக்குதல் எல்லைகளை விரிவுபடுத்தி மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக உலக நாடுகள் பல கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. போர் நிறுத்ததையும் வலியுறுத்தி வருகின்றன.ஆனால், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், “போர் நிறுத்தம் பற்றிய செய்தி உண்மையல்ல. ஹில்புல்லாக்களை அழித்தொழிக்கும் வரை தாக்குதல் தொடரும்” எனத் தெரிவித்துள்ளது.

லெபனான் வெளியுறவு அமைச்சர் அப்தல்லா போ ஹபீப் ஐ.நா. பொதுச் சபையில் நிகழ்த்திய உரையில், “இஸ்ரேல் திட்டமிட்டு லெபனான் எல்லை கிராமங்களை அழித்துவருகிறது. அதில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதே தற்போதைய மோதலுக்குக் காரணம். லெபனான் பதற்றம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் அச்சுறுத்துவதாக உள்ளது. இங்கே இந்தத் தருணத்தில் நாங்கள் போர்நிறுத்தத்தை விரும்புகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்கா, பிரான்ஸ் முன்னெடுத்துள்ள 21 நாட்கள் தற்காலிக தாக்குதல் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். நிலைமை கைமீறுவதற்குள் இதற்கு இஸ்ரேல் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version