Tamil News

தூக்கில் தொங்கிய நபர்… கடித்து தின்ற தெருநாய்கள்… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரளா மாநிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை, தெரு நாய்கள் கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித் திரிவதால் அடிக்கடி பொதுமக்கள் விபத்துகளில் சிக்கும் சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன. ஆனாலும் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் முழுமையாக பலனளிக்கவில்லை. தெரு நாய்களுக்கு சிலர் உணவளித்து வருவதால் மற்றவர்களை அந்த தெருநாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் சடலமாக தூக்கில் தொங்கியவரின் உடலை தெரு நாய்கள் கடித்து தின்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அடுத்த சாவர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் தேவதாஸ். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸில் அவரது மனைவி அளித்த புகாரி பேரில், அஜித்தை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பொலிஸார் விசாரணை நடத்தி இருந்தனர்.

தற்கொலை கொண்ட அஜித் தேவதாஸ்

இதனிடையே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அஜித் மாயமானார். இது தொடர்பாக புகாரளிக்க யாரும் இல்லாததால், அவர் மாயமான தகவல் வெளி உலகத்திற்கு தெரியவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள ஆள் அரவமற்ற வீடு ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக அருகாமை வீடுகளில் வசித்தவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து சில உள்ளூர் இளைஞர்கள் அந்த இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது பாதி உடல் கடித்து குதறப்பட்ட நிலையில், சடலம் ஒன்று அங்கிருந்த முந்திரி மரத்தில் தூக்கில் தொங்கியது தெரிய வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்தவர் அஜித் தேவதாஸ் என்பது தெரியவந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அவரது உடலை, அப்பகுதியைச் சேர்ந்த தெருநாய்கள் கடித்துத் தின்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சடலத்தை தின்றுள்ள நாய்கள் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் முதியவர்களை தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது. எனவே உடனடியாக உரிய நடவடிக்கையை அரசும், மாநகராட்சி நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version