Site icon Tamil News

ஃபாட்டா உடன் ‘தேசிய ஒற்றுமை’ ஒப்பந்தத்தை அறிவித்த ஹமாஸ்

ஃபாட்டா உட்பட மற்ற பாலஸ்தீன அமைப்புகளுடன் ‘தேசிய ஒற்றுமை’ ஒப்பந்தத்தில் ஹமாஸ் ஜூலை 23ஆம் திகதியன்று கையெழுத்திட்டது.

போர் முடிவுக்கு வந்தவுடன் அனைத்து அமைப்புகளுடன் ஒன்றிணைந்து காஸாவை ஆட்சி செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என்று சீனா தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கையெழுத்திடப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி முன்னிலையில் ஹமாஸ் அதிகாரி முசா அபு மார்சுக், ஃபாட்டா அமைப்பின் தூதர் மஹ்முட் அல் அலாவோல் ஆகியோர் உட்பட மற்ற பாலஸ்தீன அமைப்புகளைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இஸ்‌ரேலுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததும் காஸாவை ஆட்சி செய்ய இடைக்கால தேசிய நல்லிணக்க அரசாங்கம் அமைக்கப்படும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைத்து அமைப்புகளும் இணங்கின.

“இன்று தேசிய ஒற்றுமைக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இப்பாதை முழுமையடைய தேசிய ஒற்றுமைதான் ஒரே வழி. அதில் கடப்பாடு கொண்டுள்ளோம். அதை ஏற்க மற்ற அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, மற்ற பாலஸ்தீன அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்த பிறகு ஹமாஸ் அமைப்பின் அபு மார்சுகி தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்‌ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, காஸா மீது இஸ்‌ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது.போர் தொடங்கி ஒன்பது மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், 39,000க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர்.அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைவிடாத் தாக்குதல் காரணமாக காஸாவில் கடும் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version