Site icon Tamil News

மன்னிப்பின் மகத்துவம் மேலானது!

Jesus Christ in white robe gives a helping hand to the faithful, crucifixion cross on background. Son of God, christian faith symbol

“தவறு செய்துவிட்டால் மன்னிப்பு கேளுங்கள்”; “மன்னிப்பு கேட்கிறவன் மனிதன், மன்னிப்பவன் மாமனிதன்” இதுபோன்ற எத்தனையோ மன்னிப்பு தத்துவங்களை அறிவுரையாக நாம் அன்றாடம் கேட்டுவருகிறோம். உண்மைத்தான்! நாம் ஏதாவது தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிரே இருப்பவர்கள் மன்னிப்பு வழங்குவதும் அவசியம்.

மன்னிப்பு கேட்பவர்களுக்கு ஒரு தயக்கம் ஏற்படுகிறது என்றால் அதற்கு அவர்களின் குற்ற உணர்வு ஒரு முக்கிய காரணம். ஆனால், அவர்களை எப்போதும் ஈகோ பிடித்தவர்கள் என்றுத்தான் முக்கால்வாசி பேர் தவறாக நினைத்துக்கொண்டு அவர்களை வெறுக்கிறார்கள். மன்னிப்பு கேட்பதை விட மன்னிக்கக் கற்றுக் கொண்டாலே வாழ்க்கை அழகாகிவிடும். எப்படி என்று விளங்கவில்லையா? ஒரு உண்மை கதை இதோ:

அந்த பெண் ஒருவரிடம் வேலைப் பார்த்துவந்தாள். அவளுக்கு திக்கி திக்கிப் பேசுவது பிறப்பு இயல்பு. அது அங்குள்ள அனைவருக்குமே தெரியும். ஒருமுறை அந்த பெண் பேசும்போது உதிர்த்த வார்த்தைகள் எதிரே உள்ளவருக்கு தவறாக புரிந்துவிட்டது. அதற்கு அவள் மன்னிப்பு கேட்டு அதை அவருக்கு புரியவும் வைத்தாள். அப்போது அவருக்கு அந்த விஷயம் புரிந்தது. ஆனாலும், அதன்பிறகு அவள் செய்த காரியங்கள் தவறு இல்லை என்றாலும் தொடர்ந்து எல்லாவற்றிற்கும் எரிந்து விழத் தொடங்கினார். அவர் கொடுத்த வேலையை அவள் சரியாக செய்யவில்லை என்றால், என்னாச்சு? ஏன் செய்யவில்லை? என்றுகூட கேட்காமல் மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள் என்று கூறிக்கொண்டே இருந்தார். மன்னிப்பு கேட்டால் முடிந்துவிடும் காரியம்தான். ஆனால் செய்யாத தவறுக்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அவள் கேட்கவில்லை.

ஒவ்வொரு முறையும் அவளை மன்னிப்பு கேள் என்று கூறி அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார் அவர். இது மனதளவில் அவளை மிகவும் பாதித்தது. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க எளிதாக இருந்தது அவளுக்கு. ஆனால் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க சொல்லி அவர் தந்த அழுத்தங்கள் அவளுக்கு மிக மிகக் கொடுமையாக இருந்தது. அது அவளைத் தனிமை நாடத் தூண்டியது. மனதிலும் மூளையிலும் குழப்பங்கள் சூழ்ந்து எப்போதும் யாரோ அவளிடம் பல யோசனைகள் கூறுவதுபோல் ஒரு பிரம்மை உண்டானது. இறுதியில் அந்த வேலையை விட்டு வந்துவிட்டாள். அவள் அதிலிருந்து வெளிவர பல காலம் ஆனது.

நீங்கள் கேட்கலாம் இவ்வளவு கஷ்டம் அடைவதற்கு பதிலாக மன்னிப்பு கேட்கலாமே என்று. அவள் மன்னிப்பின் உண்மையான அர்த்ததை புரிந்திருந்தாள், சுயமரியாதையின் அர்த்தம் தெரிந்திருந்தது. மன்னிப்பு கேட்பது சுலபம்தான். ஆனால் செய்யாத தவறுக்கு, அது மிக மிக கடினம்.

மன்னிப்பு ஒன்றும் எப்போதும் கூறிக்கொண்டிருக்கும் வார்த்தையல்ல. ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறு செய்துவிட்டு மனதளவில் அந்த தவற்றை உணர்ந்து மனப்பூர்வமாக கேட்கும் மன்னிப்புத்தான் மகத்துவம் நிறைந்த மன்னிப்பு.

தவறு செய்தவருக்கு காரணம் வெளியில் சொல்ல முடியாத ஒன்றாக இருக்கலாம். அல்லது அவரின் தனிப்பட்ட இயல்பின் காரணமாகவோ இருக்கலாம்? எவரொருவர் மனப்பூர்வமான மன்னிப்பை கேட்கிறாரோ, அவரைக் காரணம் கேட்காமல் மன்னிப்பதே சரியானது. அழகானதும்கூட. அதேசமயம் வற்புறுத்தலின் பேரில் பெறப்படும் மன்னிப்பு அர்த்தமற்றது.

இதையும் நினைவில்கொள்ளுங்கள். திரும்ப திரும்பத் தவறு செய்து, மன்னிப்பு என்ற வார்த்தையை அவமானப்படுத்தும் அவர்களை எப்போதும் மன்னிக்காதீர்கள்.

நன்றி கல்கி

Exit mobile version