Site icon Tamil News

புதிய அம்சத்தை வெளியிட்ட கூகுள்!

கூகுள் நிறுவனம் சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் Unknown Tracker Alert என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இனி உங்களுடைய முழு அனுமதியின்றி மறைமுகமாக உங்கள் அருகே ட்ராக்கர் கருவியைப் பயன்படுத்த முடியாது. அப்படி உங்களுக்குத் தெரியாமல் யாராவது பயன்படுத்தினால் உடனடியாக உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் அம்சம்தான் இந்த Unknown Tracker Alert.

ப்ளூடூத் மூலம் இயக்கப்படும் ஆப்ஜெக்ட் டிராகர்கள் தற்போது பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொலைந்து போன அல்லது நாம் தவறவிட்ட பொருட்களின் இடத்தை துல்லியமாக காட்டுவதால் பல நேரங்களில் இது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் எல்லா தொழில்நுட்பங்களைப் போலவும் இதையும் சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதனால், மக்களை இதிலிருந்து காக்கும் அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

இந்த டிராக்கர்களை சிலர் யாரையாவது மறைமுகமாக பின்தொடர்வதற்கு அல்லது திருடுவதற்காக ஒருவரின் வாகனத்தில் அவர்களுக்கே தெரியாமல் பொருத்திவிடும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்துவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படி இனி யாரும் செய்யக்கூடாது என்பதற்காகவே அன்னோன் டிராக்கர் அலர்ட் அம்சத்தையும், பைண்ட் மை டிவைஸ் நெட்வொர்க் அம்சத்தையும் கூகுள் அறிவித்துள்ளது.

ஃபைண்ட் மை டிவைஸ் அம்சம் ஏற்கனவே பல சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அறிவித்துள்ள புதிய அம்சம் பீட்டா வெர்ஷனில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வெளிவந்துள்ளது. இந்த அம்சத்தால் உங்களுக்கே தெரியாத ட்ராக்கர் எவையேனும் உங்களைப் பின் தொடர்ந்தால், அந்த இடத்தை இந்த புதிய அம்சம் துல்லியமாக மேப் மூலமாக சுட்டிக் காட்டிவிடும். இதைப் பொருத்திய நபர்களுக்கே தெரியாமல் கண்டறியும் வகையில் ‘ப்ளேஸ் சவுண்ட்’ என்ற விருப்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்தி ட்ராக்கர் சாதனத்தின் எண் மற்றும் அது இணைக்கப்பட்டுள்ள போன் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் வரை தகவலைப் பெற முடியும். தற்போது இது ஒரு சில டிராகர்களை மட்டுமே ஆதரிக்கிறது. எல்லா வகையான டிராகர்களுக்கும் இந்த அம்சம் வேலை செய்யாது.

இருப்பினும் எவ்வித சந்தேகமும் இல்லாமல் பிறருடைய கண்காணிப்பை தவிப்பதற்கு தேவையான அம்சம் தான் இது. ப்ளூடூத் டிராக்கர்கள் சிறியதாக இருப்பதால் ஒருவரின் பாக்கெட், வாகனம், பர்ஸ், போன்றவற்றில் எளிதாக மறைத்து வைத்துவிடலாம். அவர்களுடைய வசிப்பிடத்தை அவர்களுக்கே தெரியாமல் இந்த டிராகர்களின் உதவியோடு கண்டுபிடிக்கலாம்.

இது போன்ற குற்ற சம்பவங்களைத் தவிர்க்கவே கூகுள் நிறுவனம் இந்த புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு சாதனங்களில் கொண்டுவந்துள்ளது.

Exit mobile version