Tamil News

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி நீதி கோரி மிதியுந்துப் பயணம்

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும், தமிழீழ விடுதலையையும் கோரி மிதியுந்துப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர் இல்லம் நோக்கி எழுச்சியோடு செல்கின்றது.

இப்பயணத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதான ஆளும், எதிர்க்கட்சி அலுவலகங்களுக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சு அலுவலகங்களுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.

இம்மனுக்களில், இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்ப நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை தேசத்திற்கெதிராக உடனடியாகக் காத்திரமான நடவடிக்கையில்  பிரித்தானிய அரசாங்கம் ஈடுபடவேண்டும் என்றும் தமிழின அழிப்பிற்கான நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் தமிழீழ மக்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வாக சுதந்திர தமிழீழமே அமைய வேண்டும் என்றும் இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் இளையோர் TYO-UK அமைப்பால் தயாரிக்கப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான ஆவணச் சிறு வெளியீடுகளும் பொது மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

இன்று எழுச்சியோடு தொடங்கப்பட்ட இப்போராட்டப்பயணமானது நாளை கொலண் வழியாகச் சென்று ஏனைய ஐரோப்பிய நாடுகளூடாகப் பயணித்து, 18/09/2023 அன்று சுவிஸ் ஐ.நா திடலில் நடைபெறும் பேரணியில் பேரெழுச்சியோடு  இணையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பேரணியில் அனைத்து நாடுகளில் இருந்தும் தேசியச் செயற்பாட்டாளர்களும், தேசப்பற்றாளர்களும் இணைந்து ஐ.நா மன்றம் முன்பாக எமது தமிழீழ தேசத்தின்  தேசியக் கொடியை ஏற்றி, எமது அரசியல் அபிலாசைகளை உறுதியோடு முரசறைய இருக்கின்றார்கள்.

எனவே இப் போராட்டப் பயணத்தைப் பலப்படுத்துமாறு புலம்பெயர் தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Exit mobile version