Site icon Tamil News

மாலைத்தீவிலிருந்து வெளிநாட்டு ராணுவம் வெளியேற்றப்படும் – முகமது முயீஸ் அதிரடி

மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும் என, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள முகமது முயீஸ் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடான மாலைத்தீவில் அண்மையில் அதிபர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகமது முயீஸ் வெற்றி பெற்று அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார். வெற்றிக்கு பிந்தைய முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ”மாலைத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவ படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படும்” என தெரிவித்தார்.

மாலத்தீவில் இந்திய ராணுவம் மட்டுமே முகாமிட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்தியா என பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவர் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். தற்போது மாலைத்தீவு அதிபராக பதவி வகித்து வரும் இப்ராஹிம் முகமது சோலிஹ், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இவருக்கு முன் பதவியில் இருந்த அதிபர் அப்துல்லா யமீன், சீனாவுக்கு நெருக்கமாக இருந்தார்.

மாலைத்தீவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் சீனா முதலீடு செய்தது. ஊழல் வழக்கில் சிக்கி இவர் சிறை சென்றபின் புதிய அதிபராக பதவி ஏற்ற இப்ராஹிம் முகமது சோலிஹ், சீனாவிடம் இருந்து விலகியே இருந்தார். இந்தியாவுடன் பரஸ்பரம் நல்லுறவை பேணி வந்தார். இந்த நிலையில் தற்போது அதிபராக பதவி ஏற்க உள்ள முகமது முயீஸ் சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதனால் மாலத்தீவு – சீனா உறவு மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

இது, தென் சீன கடல் பகுதியின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதனை சமாளிக்கும் வகையிலான ராஜதந்திர நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version