Site icon Tamil News

பாகிஸ்தானில் முதன்முறையாக மந்திரியாக பதவியேற்ற சீக்கியர்

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ம் திகதி பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் அதன் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர், பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பநவியேற்று கொண்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது ஆட்சியமைத்து உள்ளது. அதன் முதல்-மந்திரியாக, நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம் நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில், அவருடைய மந்திரி சபையில் சர்தார் ரமேஷ் சிங் அரோரா (49) மந்திரியாக இன்று பொறுப்பேற்று கொண்டார். 3 முறை சட்டசபை உறுப்பினரான அரோரா, நரோர மாவட்டத்தில் இருந்து வந்தவர் ஆவார். பஞ்சாப் மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் மந்திரியாக பதவியேற்கும் முதல் சீக்கியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அரோரா, 2013-ம் ஆண்டில் பஞ்சாப் மாகாண சட்டசபையில் பதவி ஏற்று கொண்ட முதல் சீக்கியரும் ஆவார். இதேபோன்று பஞ்சாப்பில் கிறிஸ்தவ சிறுபான்மை சமூக உறுப்பினரான கலில் தாஹிர் சிந்து என்பவர் பஞ்சாப் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு மனித உரிமைகள் துறைக்கான மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

 

Exit mobile version