Site icon Tamil News

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் தீ விபத்து!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் தீ பரவியது.

தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத்.டீ.பர்னாட் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் அதிகாலை இந்த கப்பலில் தீ பரவியுள்ளது.

MSC CAPETOWN 3 எனப்படும் குறித்த சரக்கு கப்பல் 10ஆம் திகதி பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. JCT 4 முனையத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த போது கப்பலில் தீ பரவியுள்ளது.

பொட்டாசியம் காணப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொள்கலனை அந்த சந்தர்ப்பத்தில் அகற்றியதாக துறைமுக அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.

அபாய நிலையிலுள்ள ஏனைய கொள்கலன்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த கப்பலில் இருந்து 995 கொள்கலன்கள் தரையிறக்கப்படவிருந்தன.

எவ்வாறாயினும் கப்பலிலிருந்து 880 கொல்கலன்களே தரையிறக்கப்பட்டுள்ளன. தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக அதிகாரசபையின் தலைவருக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version