Tamil News

மட்டக்களப்பில் நெல் விலையினை உறுதிப்படுத்துமாறு கோரி விவசாயிகள் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளினால் நெல் விலையினை உறுதிப்படுத்துமாறு கோரி இன்று மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைகள் ஆரம்பித்துள்ள நிலையில் நெல் விலையினை அரசாங்கம் தீர்மானித்து அதனை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் நெல் கொள்வனவினை மேற்கொள்ளுமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரிலிருந்து ஊர்வலமாக விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்று மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கிலோ நெல்லுக்கு 120ரூபா தீர்மானிக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல் கொள்வனவில் உரிய விலைகள் நிர்மாணிக்கப்படாத காரணத்தினால் விவசாயிகள் தொடர்ச்சியாக நஸ்டத்தினை எதிர்கொண்டுவருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அரசாங்கம் 120ரூபா வீதம் நெல்கொள்வனவினை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும் எனவும் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதிசெய்வதை நிறுத்தவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டன.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே,உடன் நெல்கொள்வனவினை ஆரம்பியுங்கள்,வறிய மக்களுக்கு நிவாரணத்தை வழங்கு,நெல் விலையினை உயர்த்துங்கள் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது விவசாய அமைச்சருக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் அவரின் உருவப்பொம்மையும் எரிக்கப்பட்டது.

Exit mobile version