Site icon Tamil News

மத்திய மாகாணத்தில் இரு நாட்கள் பரீட்சைகள் நிறுத்தம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024 திட்டம் இதுவரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (16) நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டத்திற்காக, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் இன்றும் நாளையும் (17) பாடசாலை பருவ பரீட்சைகள் நடைபெறாத வகையில் பரீட்சை அட்டவணையை அரசாங்கம் தயாரித்துள்ளதாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய மாகாண பாடசாலைகளில் கடந்த 10 நாட்களாக ஆரம்பமான பருவப் பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நடைபெறவிருந்த போதிலும், ஜனாதிபதியின் அரசியல் செயற்திட்டத்திற்காக இரண்டு நாட்களாக பரீட்சைகளை நடத்தாமல் இருப்பது வெட்கக் கேடானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் மிகவும் நியாயமான தொழில் பிரச்சினைக்கான போராட்டத்தை சீர்குலைக்கும் பயங்கரவாத செயற்திட்டமாக பார்க்கும் அரசாங்கம், ஜனாதிபதியின் அரசியல் திட்டத்திற்காக இவ்வாறு பிள்ளைகளின் கல்வியை சீர்குலைப்பதை எவ்வாறு விளக்க முடியும் என செயலாளர் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை, ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் திட்டத்திற்காக 4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

Exit mobile version