Site icon Tamil News

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் விடுதலை

தாய்லாந்து நாட்டின் பிரதமராக 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இருந்தவர் 74 வயதான தக்சின் ஷினவத்ரா.

2006-ம் ஆண்டு நடந்த ராணுவ சதியால் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தொடர்ந்து வெளிநாட்டுக்கு தப்பியோடி தஞ்சம் புகுந்த அவர், 16 ஆண்டுகளாக தலைமறைவானார்.

இதன்பின் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடு திரும்பிய அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. பதவி காலத்தின்போது அதிகார துஷ்பிரயோகம் செய்தல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு எதிராக 8 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அரச மன்னிப்பு கோரினார். இதன் தொடர்ச்சியாக அவருடைய சிறை தண்டனை ஓராண்டாக குறைக்கப்பட்டது.

வயது முதிர்வு அல்லது மருத்துவ சூழல் அடிப்படையில், அந்நாட்டில் பரோல் வழங்கப்படும். 6 மாத காலம் சிறையில் இருந்த அவருக்கு இந்த மாத தொடக்கத்தில் பரோல் கிடைத்தது.

அவர், அதிக ரத்த அழுத்தம் மற்றும் குறைவான பிராணவாயு அளவு உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார். தக்சினுக்கு கிராமப்புற மற்றும் உழைக்கும் பிரிவினரிடமிருந்து பேராதரவு கிடைத்தது.

இந்நிலையில், அவர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, பாங்காக் நகரில் உள்ள போலீஸ் ஜெனரல் மருத்துவமனையில் இருந்து அவருடைய மகள்களான பேடங்டார்ன் மற்றும் பின்டோங்டா ஷினவத்ரா ஆகியோருடன் வெளியே வந்து, கருப்பு நிற வேனில் ஏறி சென்றார். பாங்காங்கில் உள்ள அவருடைய குடியிருப்புக்கு ஓய்வெடுக்க அவர் சென்றார்.

Exit mobile version