Site icon Tamil News

தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலைப் பெற்று வருகிறது.

கடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து இன்று இந்த தொடரின் 4-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது.

அதன்படி 50 ஓவர்கள் அடங்கிய இந்த போட்டியை 39 ஓவராக மாற்றி விளையாடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், இங்கிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள்.

தொடக்கத்திலே சற்று ரன்களை சேர்த்தாலும் தொடக்க வீரரான ஃபில் சால்ட் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் அதிரடியாக விளையாடக் கூடிய வில் ஜேக்ஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த பென்டக்கெட்டும் ஹாரி புரூக்கும் இணைந்து ஆஸ்திரேலியா அணியின் பவுலர்கள் வீசும் பந்தை சிதறடித்தனர். இருவரும் இணைந்து அவர்களது கூட்டணியில் 80 ரன்களை கடந்தனர். இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜேமி ஸ்மித் 28 பந்துகள் விளையாடி 39 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக ஆல்ரவுண்டரான லிவிங்ஸ்டோன் அதிரடியான ஒரு கேமியோவை அமைத்தார். அவர் வெறும் 27 பந்துகள் பிடித்து 62 ரன்களை அடித்து இங்கிலாந்து அணி ஸ்கோரை உச்சத்தில் உயர்த்தினார். இறுதியில் 39 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து இங்கிலாந்து அணி 312 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜாம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். அதைத் தொடர்ந்து 313 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் களமிறங்கியது. அதிரடியாக விளையாடக்கூடிய ட்ராவி ஹெட்34 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதன் பின் ஆஸ்திரேலிய அணியில் எந்த ஒரு வீரரும் நிலைத்து விளையாடவில்லை. தொடர்ந்து களமிறங்கி விளையாடிய ஸ்டீவ் ஸ்மித், ஜாஸ் இங்கிலீஷ், லாபுசேன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல் என எந்த ஒரு அதிரடி வீரர்களும் 10 ரன்கள் கூட தாண்டாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

இதனால் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் மிக மோசமாக தடுமாறியது. இறுதியில், 24.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்தது. இதனால், 186 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் மேத்யூ பாட்ஸ் 4 விக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட், பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் மற்றும் அடில் ரஷித் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.

மேலும், 5 போட்டிகள் அடங்கிய இந்த ஒருநாள் தொடரை 2-2 என சமநிலை செய்துள்ளனர். மேலும், இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் செப்-29ம் தேதி நடைபெறவுள்ளது.

Exit mobile version