Site icon Tamil News

ரஷ்யாவில் உக்ரேன் ஊடுருவலை அடுத்து பெல்கோரோடில் அவசரநிலை அறிவிப்பு

உக்ரேன் ஊடுருவிய ரஷ்யாவின் ஒரு பகுதியான பெல்கோரோடின் ஆளுநர், வட்டார அளவில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகள் தடுத்து நிறுத்தினாலும் எல்லையில் உள்ள குர்ஸ்க் வட்டாரத்தில் உக்ரேன் தொடர்ந்து தாக்குதலை நடத்தி முன்னேறி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரேன், தற்போது 74 நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இடத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தனது ராணுவத்தின் தகவலை சுட்டிக்காட்டி உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பெல்கோரோடில் சூழ்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் வயசெஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.மத்திய அரசு அவசரநிலையை அறிவிக்குமாறு விளாடிமிர் புட்டின் அரசாங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.இதற்கிடையே இரவு முழுவதும் 117 உக்ரேனிய வானூர்திகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா அறிவித்தது.

செவ்வாய்க் கிழமை இரவு உக்ரேன் 35க்கும் மேற்பட்ட வானூர்தி தாக்குதலை நடத்தியது என்று மாஸ்கோவுக்கு தெற்கே பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவ்வட்டாரத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் குசேவ் கூறினார்.இதற்கிடையே உக்ரேனின் தாக்குதலைக் குறித்து செவ்வாய்க் கிழமை முதல் முறையாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புட்டினுக்கு இத்தாக்குதல் உண்மையிலேயே தர்மசங்கடத்தை ஏற்படுத்தி யிருக்கும் என்றார்.

“உக்ரேனுடன் எங்களுக்கு நேரடித் தொடர்பு உள்ளது. உக்ரேன் நடவடிக்கைகள் பற்றி கடந்த ஆறு நாள்கள் முதல் எட்டு நாள்கள் வரை நான்கு முதல் ஐந்து மணி நேரத்துக்கு ஒரு முறை எனக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது,” என்று பைடன் கூறினார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் வட்டாரத்தில் ஊடுருவிய உக்ரேனின் நோக்கம், ரஷ்யா அதன் படைகளை உக்ரேனிலிலிருந்து மீட்டுக் கொள்வதே என்று செவ்வாய்க் கிழமை அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

உக்ரேனியப் படைகள் எதிர்பாராத தாக்குதலைத் தொடுத்த ஒரு வாரத்திற்குப் பிறகு குர்ஸ்கில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா படைகளை ஒன்றுதிரட்டி வருகிறது என்று அந்த அதிகாரியான ஷான் வாக்கர் குறிப்பிட்டார்.ஆனால் உக்ரேனின் நடவடிக்கைகள் பற்றி தமக்கு முன்னறிவிப்பு எதுவும் வரவில்லை என்று பைடன் நிர்வாகம் கூறியுள்ளது.

Exit mobile version