Site icon Tamil News

‘நிபா’ வைரஸ் இலங்கைக்குள் ஊடுருவுவதை தடுக்க தீவிர முயற்சி

‘நிபா’ வைரஸ் இலங்கைக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்காக முன்னோடி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

, சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,

“நிபா வைரஸ் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் நான் அவதானித்ததுடன், இந்த விடயம் தொடர்பாக மருத்துவ ஆய்வு நிறுவன அதிகாரிகளால்,

சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவிவரும் நிபா வைரஸ் இலங்கைக்குள் ஊடுருவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கமும் சுகாதாரத் துறையினரும் முன்னெடுக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்த போது, இந்தியா, பங்களாதேஷ், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மிகவும் தீவிரமாக ‘நிபா’ வைரஸ் பரவுவதுடன், இது இலங்கையிலும் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த வைரஸால் ஏற்படும் மரண வீதம் 40 -70 சதவீதமாக உள்ளது. கொவிட் தொற்றால் மரண வீதம் 2 -3 சதவீதமாகவே இருந்துள்ளது. நிபாவின் அச்சுறுத்தல் அதனை விட அதிகமாகும்.

இதனைக் கருத்திற்கொண்டு இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இலங்கைக்குள் அது ஊடுருவாமல் தடுப்பதற்கு உடனடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

 

Exit mobile version