Site icon Tamil News

உயர் இரத்த அழுத்தம் குறைய இலகுவான வழிமுறைகள்

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

மாறிவரும் உணவு பழக்க வழக்கம், வேகமான வாழ்க்கை முறை இவற்றின் விளைவாக பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று ரத்த அழுத்தம். ரத்த அழுத்தம் என்பது இதயம் சுருங்கி விரிவடையும் போது ஏற்படக்கூடிய அழுத்தமாகும்.

காரணங்கள் :
இது உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எப்போதுமே கோபம், எரிச்சல் ,மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்படலாம் .

மேலும் ரத்த அழுத்தமானது சராசரி அளவை விட குறைவாக இருந்தால் குறைந்த ரத்த அழுத்தம் என்றும் அதிகமாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு சீராக இல்லாமல் இருந்தால் நாளடைவில் இதயம் ,மூளை சிறுநீரகம் போன்றவற்றை எளிதில் பாதிப்படையச் செய்யும்.

ரத்த அழுத்தம் குறைய கடைப்பிடிக்க வேண்டியவைகள்;
உப்பு;

ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் உண்ணும் உணவில் உப்பை குறைத்து உண்ண வேண்டும். ஏனெனில் இதில் உள்ள சோடியம் உடலில் உள்ள நீரை உறிஞ்சி ரத்தத்தில் கலக்கும். இதனால் ரத்தத்தில் அளவு அதிகரிக்கும் மேலும் இதயத்திற்கு அதிக சுமை ஏற்படும்.

இது ரத்த நாளங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிந்து ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்றவை கூட ஏற்படுத்தும்.

துரித உணவுகள்;

துரித உணவுகளான பீட்சா ,பர்கர் மற்றும் சிப்ஸ், குளிர்பானங்கள், வனஸ்பதியால் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள், வெள்ளை சர்க்கரை ,மைதா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உடல் எடை;

உடல் எடையை பொருத்தவரை சீராக வைத்துக் கொள்வது அவசியம். பொதுவாகவே உடல் எடை அதிகமாக இருந்தாலே ரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது .அதனால் எடையை குறைப்பதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மற்றும் உணவு பழக்க வழங்களில் மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொட்டாசியம்;

தினசரி உணவில் பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதயத் தசைகள் சீராக இயக்கவும் உதவுகிறது .

இளநீர் ,வாழைப்பழம், கீரைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, உலர் திராட்சை, தயிர், பூண்டு பால், செம்பருத்தி டீ போன்றவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இவற்றை உணவில் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தம்;

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது மூளையில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும் .இது குறுகிய கால ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் .இதனால் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் காஃபைன் அதிகம் உள்ள டீ, காபி ,டார்க் சாக்லேட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். போதுமான அளவு தூக்கம் அவசியம் .தினமும் எட்டு மணி நேர தூக்கம் மேற்கொள்வது மிக அவசியமானது. இதனால் 20% ரத்த அழுத்தம் குறையும் என ஆய்வில் கூறப்படுகிறது.

மேலும் வாக்கிங், சைக்கிளிங், போன்ற எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். மது, புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது ரெனின் ,ஆஞ்சியோடென்சின் போன்ற ஹார்மோன்களை பாதித்து ரத்த நாளங்களை சுருங்க செய்கிறது.

ஆகவே மது மற்றும் புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த மேற்கூறிய வழிமுறைகளை கடைப்பிடித்து உயர் ரத்த அழுத்தம் வராமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version