Site icon Tamil News

வியர்வை துர்நாற்றத்தை விரட்டியடிக்க இலகு வழிமுறைகள்!

கோடைக் காலத்தில் வியர்ப்பது பொதுவாக அனைவருக்கும் சகஜமான ஒன்றுதான். ஆனால், சிலர் காலையில் எழுந்து சந்தோஷமாக குளித்து விட்டு, வீட்டிலுள்ள வாசணை திரவியங்களை பூசிக்கொண்டு வெளியில் செல்வார்கள். வெளியில் சென்று 30 நிமிடங்கள் கூட இருக்காது, வியர்வை வாடை வர ஆரம்பித்து விடும்.

வியர்வை ஏற்படுத்தும் சுரப்பிகள் எக்ரைன், அபோக்ரைன் என அழைக்கப்படுகின்றன. இதில், உடலின் பல பகுதிகளில் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் சுரக்கும் சுரப்பி எக்ரைன் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அக்குள், நெஞ்சுப்பகுதி, பிறப்புறுப்பு பகுதியில் அபோக்ரைன் சுரப்பி சுரக்கிறது. இதுதான் வியர்வை வரவும், வாடை வரவும் காரணமாகிறது.

வியர்வை துர்நாற்றத்தை விரட்டியடிக்க சில டிப்ஸ்:

தினமும் இரண்டு முறை காலையில் ஒரு முறை, இரவு படுக்கைக்கு செல்லும் முன் என இரண்டு முறை குளியுங்கள். குளிக்கும்போது கிருமி நாசினி சோப்பை உபயோகித்து வாருங்கள். உங்கள் உடம்பை சரியாகக் கழுவுங்கள். பின்னர் அக்குள் பகுதிகளில் தண்ணீர் தேங்கியில்லாமல் நன்றாக உலர்த்திய பின்னர் ஆடைகளை அணியுங்கள். இப்படி செய்வதால் அக்குளில் இருந்து வரும் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

குளிப்பதற்கு முன்னர் வைத்திருக்கும் தண்ணீரில் எலுமிச்சைப் பழத்தை பிழிந்து விட்டு குளிக்க வேண்டும். எலுமிச்சைப்பழம் கலந்து குளிப்பதால் உடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும்.

கோடைக் காலத்தில் கை அக்குள்களில்தான் அதிகம் வியர்த்து வாடை வரும். அதனைத் தவிர்க்க கோடைக் காலத்தில் கை அக்குள்களில் உள்ள முடிகளை முழுவதும் மழித்து விடுங்கள்.

எவ்வளவு அவசர வேலையாக இருந்தாலும் சரி, குளித்து முடித்தவுடன் நன்றாக ஈரம் இல்லாமல் துவட்டுங்கள். ஈரம் உடலில் பூஞ்சை படரவும், வாடை வரவும் காரணமாகும்.

கோடைக் காலத்தில் பருத்தி ஆடைகள் அணிவது நல்லது. அதுவும் ஆடைகளை இறுக்கமாக அணியாமல், தளர்வாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்றாக காற்று போகும்படி ஆடைகளை அணிந்தால் உடலில் ஈரம் இல்லாமல் இருக்கும்.

கால்களை எப்போதும் உலர்ந்த நிலையில் வைத்திருங்கள். அதில் வியர்வை வரும் வாய்ப்பை ஏற்படுத்தும் ரப்பர் செருப்பை தவிர்த்து தோல் செருப்பை அணியுங்கள். சாண்டல் டைப் செருப்புகள் நல்லது. சாக்ஸ் அணியும் சூழலில் காட்டன் சாக்ஸ் அணியுங்கள்.

கால் பாதங்களில்தான் மைக்ரோ கிருமிகள் அதிகளவில் உருவாகும். இதுதான் வியர்வையை உருவாக்கி வாடையை ஏற்படுத்தும். எனவே, குளித்து முடித்தவுடன் கால் பாதங்களில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோடைக் காலத்தில் மசாலா மற்றும் மாமிச உணவுகளையும், காபின், ஆல்கஹால் பானங்களையும் தவிருங்கள். இவை வியர்வையை அதிகரிக்கும் ஏஜெண்டுகள். அதிகப்படியான உடல் எடை வியர்வையை அதிகரிக்கும். எனவே, கோடையில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல், உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் உடலில் வாடை வரக் காரணம்.

கோடைக் காலத்தில் இரண்டு முறை உடலுக்கு பவுடர் பயன்படுத்தலாம். அந்த பவுடர் கிருமி நாசினி கலந்த மற்றும் சந்தனம், ரோஜா கலந்து இருந்தால் நல்லது, சந்தனப் பொடி + ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் அக்குளில் தடவி வர வேண்டும். இப்படிச் செய்வதால் வியர்வை வாடை நீங்கி, சந்தனத்தின் மணம் கமகமக்கும்.

வெளியில் செல்லாத நேரங்களில் கிழங்கு மஞ்சளை உரசி, அதனை அக்குளில் தடவி வைத்து விட்டு குளிக்கலாம். மஞ்சளில் இருக்கும் மருத்துவப் பொருட்கள் வியர்வை சுரப்பியில் பாக்டீரியாக்களை அழிக்கும்.

தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் குழைத்து அக்குளில் தடவி விட்டு குளிக்கும்பொழுது பாசிப்பருப்பு மாவு பூசிக் குளிக்கவும். இப்படிச் செய்தால் வியர்வை மணம் நிரந்தரமாக செல்லும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

அக்குளில் வாடை இருப்பவர்கள் கற்றாழையை எடுத்து அந்த பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வரலாம். இப்படி செய்வதால் அக்குளில் இருக்கும் வாடை நீங்குவதோடு கருமை மறையவும் வாய்ப்பு இருக்கின்றது.

பழுத்த தக்காளிகளை எடுத்து பேஸ்ட் செய்து குளிப்பதற்கு முன்னர் அக்குளில் தடவி விட்டு அரைமணி நேரம் கழித்து குளிக்கவும். இப்படிச் செய்வதால் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

 

Exit mobile version