Site icon Tamil News

ஒற்றைத் தலைவலி அலட்சியம் வேண்டாம்

தீராத ஒற்றைத்தலைவலிக்காக மருத்துவமனை வந்தவரிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது மூளையில் நிறைந்திருந்த நாடாப்புழுக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நடப்பு வாழ்க்கைச் சூழலின் தலையாய உடல் உபாதைகளில் ஒன்றாக தலைவலி விளங்குகிறது. சூடான டீ/காபி, இசை, தூக்கம் அல்லது தலைவலி தைலம் என எளிமையான முறையில் அப்படியான தலைவலியை தாண்டி வருவோர் அதிகம். ஆனபோதும் மைக்ரேன் என்ற பெயரில் மண்டையிடியாய் வலி கண்டவர்கள் பாடு சொல்லி மாளாது. அப்படியானவர்கள் மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

அமெரிக்காவில் அவ்வாறு ஒருவரின் மைக்ரேன் தலைவலி அனுபவம், அவர் குறித்து மருத்துவ இதழ்களில் எச்சரிக்கை கட்டுரை எழுதும் அளவுக்கு சென்றிருக்கிறது. மருத்துவமனை நிர்வாகத்தால் பெயர் வெளியிடப்படாத ஃபுளோரிடாவை சேர்ந்த 52 வயது அமெரிக்கர், 3 மாதங்களாக தொடர்ந்த மைக்ரேன் தலைவலிக்காக சிகிச்சை பெற மருத்துவமனை சென்றார். அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.

அன்னாரது மூளையில் ஏராளமான நாடாப்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் அடையாளம் காணப்பட்டன. இதனை நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் என்றழைக்கப்படும் ஒட்டுண்ணி தொற்று என்பதாக மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர். சரியாக சமைக்கப்படாத இறைச்சி உள்ளிட்ட உணவுகளால் அவரது வயிற்றுக்கு சென்ற நுண்ணிய நாடாப்புழு முட்டைகள், ரத்தத்தில் கலந்து மூளையில் நாடாப்புழு குடியேறவும், அங்கே பல்கிப் பெருகவும் காரணமாகி இருக்கும் என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூளையில் வீக்கம், தலைவலி கண்டவருக்கான சிகிச்சை நடைமுறையாக, அதிகளவு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் அழற்சி மருத்துகள் வழங்கப்பட்டன. மைக்ரேன் தலைவலி மட்டுமன்றி நீரிழிவு மற்றும் மிகை பருமன் கண்டிருந்த அந்த நபருக்கு, பெரும் மருத்துவ போராட்டத்துக்கு பின்னரே மூளையின் நாடாப்புழு பாதிப்புகள் அகற்றப்பட்டன. இந்த நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் தொற்று குறித்து ’அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸ்’ ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைப் பொறுத்தளவில் சரியாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் என்கிறது ஆய்வு. மற்றபடி தொற்றுகண்ட எந்த வகை இறைச்சி மற்றும் இதர உணவுகளை உட்கொண்டாலும் நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் என்பதை உள்ளடக்கிய சிஸ்டிசெர்கோசிஸ் ஆபத்து காத்திருக்கும். இவர்களுக்கு கடுமையான தலைவலியில் தொடங்கி வலிப்பு வரை ஆரோக்கிய கேடுகளும் அச்சுறுத்தும். எனவே உணவினை சமைப்பதிலும், சுகாதாரமாக பரிமாறுவதிலும் எச்சரிக்கை தேவை.

உலகெங்கிலும் சுமார் 27 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மேற்படி சிஸ்டிசெர்கோசிஸ் பாதிப்பு கண்டுள்ளனர். இந்த பாதிப்பு கண்டவர்களின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி மட்டுமன்றி, குமட்டல், வாந்தி, குழப்பம், மயக்கம், கழுத்துப் பிடிப்பு, தோலின் கீழே கட்டிகள், கண்களில் வலி, இரட்டைப் பார்வை உள்ளிட்ட அறிகுறிகளும் எட்டிப்பார்க்கும்.

Exit mobile version