Site icon Tamil News

அதிக ஈகோ உள்ளவரா நீங்கள்? – அறிந்திருக்க வேண்டியவை

தன்முனைப்பு (ஈகோ) இல்லாத மனிதனைக் காண்பது அரிது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு மனிதரும் சுயநலம் மிக்கவர்தான்.

வாழ்வில் முன்னேற வேண்டும், தன் இலக்குகளை அடைய வேண்டும் என ஒரு மனிதன் சிந்தித்து செயல்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தன்னைப் போல யாருமில்லை, தான் மட்டுமே முன்னேற வேண்டும் என்று நினைக்கும்போதுதான் அங்கே ஈகோ தலைகாட்டி அவனுக்கு அழிவைத் தருகிறது.

‘நான் சொல்வதுதான் சரி, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று ஒருவர் எண்ணும் போதும் செயல்படும் போதும் ஈகோ தலை தூக்குகிறது. நல்ல பண்புகளும் அவரை விட்டு நீங்குகிறது. தன்னைவிட பிறருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்ற எண்ணம் ஈகோ நிறைந்த ஆட்களுக்கு ஏற்படும். தனது குறையையோ பலவீனத்தையோ பிறர் சுட்டிக்காட்டும்போது ஈகோ வெடித்துக் கிளம்பி அவருடன் முட்டல் மோதல் ஏற்படுகிறது. ‘நான் சொல்லி அவன் கேட்கல, என் பலம் தெரியாம என் கிட்டயே மோதுறான்’ என்ற நினைப்பும் செயலும், அவரை உளவியல் சிக்கலிலும், உறவுச் சிக்கலிலும் கொண்டு விடுகிறது.

நான் என்ற அகந்தை உணர்வே ஒரு மனிதனை ஈகோ என்ற வட்டத்திற்குள் சிக்க வைக்கிறது. இதற்கு முற்றும் துறந்த முனிவர்கள் கூட விதி விலக்கில்லை. அவர் களுடைய ஈகோ காயப்படும் தருணங்களில் அதீத கோபத்தின் மிகுதியால் ‘இந்தாப் பிடி’ மனிதர்களுக்கு சாபம் கொடுத்தார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி, வள்ளலார், புத்தர் போன்ற ‘தான்’ என்ற அகந்தையை முற்றிலும் துறந்த ஆன்மிகப் பெரியவர்களும் இருக்கிறார்கள்.

ஒருவர் தன் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சி எடுப்பதும், போட்டி மனப்பான்மை கொண்டு பிறரை வெல்ல நினைப்பதும், ஆரோக்கியமான ஈகோவின் அறிகுறிகள். ஆனால் பிறர் வளர்ச்சியடையக் கூடாது, தான் மட்டுமே வெற்றி அடைய வேண்டும், தான் சொல்வது மட்டுமே சரி என்ற மனநிலையும், பிறர் வெற்றியில் பொறாமையும் ஏற்படும்போது ஈகோவின் நிறம் மாறி குணமும் மாறுகிறது. எதிர் தரப்பினர் மீது வெறுப்பு ஏற்பட்டு, தன் சுயத்தின் மீது மரியாதை குறைகிறது.

அளவான ஈகோ வளர்ச்சிக்கு வழி வகுக்கும் அதீத ஈகோ மனநிம்மதிக்கு குழி பறிக்கும்.

நன்றி – கல்கி

Exit mobile version