Tamil News

தனுஷின் ‘டி50’- ‘ராயன்’படத்தின் முதல் பார்வை வெளியானது!

நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருக்கும் அவரது ஐம்பதாவது படத்தின் முதல் பார்வை வெளியானது. இதனை ரசிகர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலத்தில் தன் உருவத்திற்காக பல கேலிகளைச் சந்தித்தவர் நடிகர் தனுஷ். அதன் பிறகு தனது திறமையால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பலதுறைகளிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

இப்படி சினிமாவில் அவமானங்களைச் சந்தித்து வெற்றிப் பெற்றவருக்கு நடிகராக தனது ஐம்பதாவது படம் மிக முக்கியமானது. அதனால்தான், இதனை தானே, இயக்கி நடித்திருக்கிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Image

வடசென்னை பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் இந்த கதை குடும்ப சென்டிமென்ட்டும் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என்கின்றனர். முறுக்கேறிய உடம்புடனும் மொட்டைத் தலையுடனும் கழுத்தில் ரத்தம் வடிய நடிகர் தனுஷ் திரும்பி நிற்கும்படியான போஸ்டர் ஒன்று வெளியாகி இதன் முதல் பார்வை வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது.

இப்போது ‘டி50’ முதல் பார்வை வெளியாகியுள்ளது. ஏற்கனவே, வெளியானத் தகவலை உறுதிசெய்யும்படி இதன் தலைப்பு ‘ராயன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடியான சூழலில் நடிகர்கள் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் மூவரும் உள்ளனர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த வருடம் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version