Site icon Tamil News

சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் தாமதம் – குவிந்து கிடக்கும் விண்ணப்பங்கள்

வழங்கப்பட முடியாத சுமார் 04 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இன்னும் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த காலப்பகுதியில் சுமார் எட்டரை இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியாதுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

தற்போது அது 04 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், தற்போது தமது திணைக்களத்தின் ஊழியர்கள் இரவும் பகலும் தொடர்ச்சியாக உழைத்து நாளாந்தம் சுமார் 10,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதாகவும் ஆனால் தபால் மூலம் சாரதி அனுமதிப்பத்திரங்களை விநியோகிப்பதில் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version