Site icon Tamil News

வெளிநாட்டிலிருந்து உள்ளூர் சந்தைக்கு வெள்ளரி? தக்காளி, பீட்ரூட், கேரட், லீக் இறக்குமதிக்கும் அனுமதி

மரக்கறிகள் மற்றும் பழங்கள் இறக்குமதிக்கான தடை நீக்கப்படுவது இந்நாட்டு விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது நுகர்வோருக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞான பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்தார்.

இலங்கையில் பயிரிடக்கூடிய வெள்ளரி, தக்காளி, பீட்ரூட், கேரட், லீக்ஸ், பீன்ஸ் போன்ற மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வாழைப்பழம், அன்னாசி, தர்பூசணி போன்ற பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் 15-ம் திகதி கூடி வேளாண்மைத் துறை மூலம் பயிர் முன்னறிவிப்பு செய்யப்படுகிறது.
அதற்கேற்ப இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

அறுவடை நேரத்தில் பயிர்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது சிக்கலாக உள்ளது.

நாட்டில் பற்றாக்குறையாக காணப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை மாத்திரம் இறக்குமதி செய்வது மிகவும் பொருத்தமானது என புத்தி மரம்பே தெரிவித்தார்.

விஞ்ஞான ரீதியில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டிய வேளையில் விவேகமற்ற முறையில் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வது நாட்டுக்கு எல்லா வகையிலும் தீங்கானது எனவும் இதனால் தான் நாடு பாதாளத்தில் விழுந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கோழி இறைச்சி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version