Site icon Tamil News

ஆறுதல் வெற்றி பெற்ற நியூஸிலாந்து – பந்துவீச்சில் அபூர்வ சாதனை படைத்த பேர்கசன்

ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது.

நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர்.

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்கசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காமல் 3 விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார்.

இதன் மூலம் ஆடவருக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 4 ஓவர்களில் ஓட்டம் கொடுக்காமல் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற அபூர்வ சாதனையை லொக்கி பேர்கசன் படைத்தார்.

பனாமாவுக்கு எதிராக கூலிஜ் விளையாட்டரங்கில் 2021இல் கனேடிய பந்துவீச்சாளர் சாத் பின் ஸபார் பதிவு செய்த 4 ஓவர்களில் ஓட்டமின்றி 2 விக்கெட்கள் என்ற முந்தைய சாதனையை பேர்கசன் இன்று முறியடித்தார்.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் இது புதிய சாதனையாகும்.

எவ்வாறாயினும் இருபாலாருக்குமான சர்வதேச ரி20 போட்டியில் இந்தோனேசியாவின் ரொஹ்மாலியா ரொஹ்மாலியா உலக சாதனைமிகு பந்துவீச்சுப் பெறுதியை தன்னகத்தே கொண்டுள்ளார்.

மொங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் அவர் 3.2 ஓவர்கள் வீசி ஓட்டம் கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை படைத்திருந்தார்.

இதேவேளை இன்றைய போட்டியுடன் ட்ரென்ட் போல்ட் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.

போட்டி முடிவில் ட்ரென்ட் போல்ட், அரங்கில் குழுமியிருந்த பாடசாலை மாணவர்களிடம் இருந்த பந்துகளில் தனது கையொப்பத்தை இட்டு அவர்களை மகிழ்வித்தார்.

இன்றைய போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பப்புவா நியூ கினி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றது.

சார்ள்ஸ் அமினி (17), நோமன் வனுவா (14), செசே பாவ் (12) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். உதிரிகளாக 11 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.

லொக்கி பேர்கசனை விட டிம் சௌதீ 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரென்ட் போல்ட் 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

79 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 12.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது.

எனினும் அந்த வெற்றி நியூஸிலாந்துக்கு நினைத்த அளவு இலகுவாக அமையவில்லை.

முதல் ஒவரின் 2ஆவது பந்திலேயே பின் அலன் (0) ஆட்டம் இழந்ததுடன் ரச்சின் ரவிந்த்ரா (8) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் களம் விட்டகன்றார். (20 – 2 விக்.)

மொத்த எண்ணிக்கை 54 ஓட்டங்களாக இருந்தபோது டெவன் கொன்வே 35 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் கேன் வில்லியம்சன் (18 ஆ.இ.), டெரில் மிச்செல் (19 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.

பந்துவீச்சில் கபுவா மொறியா 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: லொக்கி பேர்கசன்.

Exit mobile version