Site icon Tamil News

பாகிஸ்தானில் அரசியல் கட்சிகளிடையே மோதல்: 2 பேர் பலி; 14 பேர் படுகாயம்!

பாகிஸ்தானில் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இரு அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு தற்போதைய நிலவரப்படி, PPP கட்சி ஆதரவுடன் PML-N கட்சி சார்பில் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வாக உள்ளார். இதேபோல், முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி அதிபராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

மற்றொரு முக்கிய கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் PTI கட்சியினரின் சின்னம் முடக்கப்பட்டதால் அவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு அதிகபட்சமாக 101 இடங்களில் வெற்றி பெற்றனர். எனினும் PTI கட்சி வேறு எந்த ஆட்சியின் ஆதரவையும் பெற விரும்பாததால் எதிர்க்கட்சியாகவே செயல்படும் என இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பலூசிஸ்தான் மாகாணம் கராச்சியின் எல்லையில் உள்ள தொழில்துறை நகரமான ஹப்-பில் பலூசிஸ்தான் அவாமி கட்சியின் (PAP) முகமது சலே பூடானி வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதனை ஏற்க மறுத்து பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அலி ஹசன் ஜெஹ்ரி மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தினார். இதனால் இருகட்சி ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அப்போது 39 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மறுபரிசீலனை செய்யப்பட்டபோது PAP, பிபிபி கட்சியினரிடையே மோதல் வெடித்தது. இதில் துப்பாக்கியால் சரமாரியாக சுடப்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்று ஒருவாரம் ஆகிய உள்ள நிலையில் பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைதியின்மை நிலவுகிறது. தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்ததாக கூறி, 4 அரசியல் கட்சிகள் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குவெட்டா பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது.

Exit mobile version