Site icon Tamil News

சீனாவின் ஒத்துழைப்பு அவசியமாகும் – இலங்கை அரசாங்கம் கோரிக்கை

சீனாவுக்கு இலங்கை உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுக்கும்போது சீனா எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுபடுத்துவதுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீன நிதி நிறுவனங்களினால் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மக்கள் சீனா உருவாக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை மாலை கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதற்காக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒர் ஒழுங்கு ஒரு பாதை வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நாடு பல நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருப்பது தொடர்பாகவும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு சம்பந்தமாக தற்போது செயற்படுத்தி வரும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீன நிதி நிறுவனங்களினால் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறது.

அதேநேரம் இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்பும் சவால்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் முகம்கொடுக்கும்போது சீனாவின் சகோதரத்துவம், ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியாக பங்காளியாக இருப்பதை இலங்கை எதிர்பார்க்கிறது.

சீனாவின் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 77ஆயிரத்துக்கும் அதிகமான சீன சுற்றுலா பயணிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளனர். இலங்கையினால் அண்மையில் அறிமுகப்படுத்திய இலவச விசா அனுமதி பத்திரம் வேலைத்திட்டத்தில் சீனாவும் உள்ளடங்கி இருப்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்துவரும் நட்பு ரீதியான இராஜதந்திர தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம். மக்கள் சீனா உருவாக்கத்தின் 75ஆவது வருட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பு கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

Exit mobile version