Site icon Tamil News

செஸ் இறுதிப் போட்டி; தமிழக வீரருக்கு 2ஆம் இடம்

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா விளையாடினார். இரு கிளாசிக்கல் ஆட்டங்களை கொண்ட இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற முதல் ஆட்டம் சுமார் 4 மணி நேரம் நீடித்த நிலையில் 35வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்திருந்தது.

நேற்று (23) 2வது ஆட்டத்தில் கார்ல்சன் – பிரக்ஞானந்தா மோதினார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த நிலையில் 30வது காய் நகர்த்தலின்போது ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் இரு ஆட்டங்களின் முடிவில் கார்ல்சன், பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 1 புள்ளிகள் பெற்றனர். சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இவர்கள் இருவரும் இன்று டை பிரேக்கர் ஆட்டத்தில் விளையாடினர்.

டைபிரேக்கர்

நேர கட்டுப்பாட்டுடன் ரேபிட் வடிவில் நடைபெற்ற டைபிரேக்கரில் வெற்றியாளரை தீர்மானிக்கும் இரண்டு ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சவால் கொடுத்தார். இருந்தும் போராடிய அவரால் வெற்றி பெற முடியவில்லை. 2வது சுற்றிலும் கார்ல்சன் வெற்றி பெற, உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் இந்தத் தொடரில் ஓபன் பிரிவில் பிரக்ஞானந்தா 2ம் இடம் பிடித்தார். 3வது இடத்தை ஃபேபியானோ கருனா பிடித்தார்.

Exit mobile version