Site icon Tamil News

IPL Update – தோனிக்காக BCCIயிடம் கோரிக்கை விடுத்த சென்னை அணி நிர்வாகம்

அடுத்த ஆண்டு (2025) ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

இதனையொட்டி ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பெரும்பாலான அணிகள் 4க்கு பதிலாக 7 வீரர்களை தக்க வைக்க கோரிக்கை வைத்தன. அத்துடன் பெரும்பாலான அணிகள் மெகா ஏலத்திற்கு பதிலாக சிறிய ஏலம் நடத்துவதை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளன.

அந்தக் கூட்டத்தில் தங்களுடைய முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தக்க வைப்பதற்காக சென்னை அணி நிர்வாகம் பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு BCCIயிடம் கோரிக்கை வைத்துள்ளது.

குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்கள் 5 வருடங்களை தாண்டி விட்டால் அன்கேப்ட் (அறிமுக வீரர்) வீரர்களாக கருதப்படுவார்கள்.

அதாவது அந்த விதிமுறையின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் 5 வருடத்தை தாண்டி விட்டால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களாக கருதப்படுவார்கள். எனவே அவர்களை ரூ. 20 லட்சம் என்ற மிகவும் குறைந்த தொகைக்கு தக்க வைக்க முடியும்.

இந்த விதிமுறை கடந்த 2008 முதல் 2021 வரை நடைமுறையில் இருந்தது. இருப்பினும் 2021ஆம் ஆண்டு அந்த விதிமுறை நீக்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பிசிசிஐ-யிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த விதிமுறையை பயன்படுத்தினால் ரூ.12 கோடிக்கு பதிலாக தோனியை, வெறும் ரூ. 20 லட்சத்திற்கு சி.எஸ்.கே. அணியால் தக்க வைக்க முடியும்.

Exit mobile version