Site icon Tamil News

காஸாவில் செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு அருகே குண்டுவீச்சு; 22 பேர் பலி!

காஸாவில் ஜூன் 21ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 22 பேர் கொல்லப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் அனைத்துலகக் குழு (ஐசிஆர்சி) தெரிவித்துள்ளது.காஸாவில் உள்ள அதன் அலுவலகம் இச்சம்பவத்தில் சேதமடைந்ததாக அது கூறியது. அந்த அலுவலகத்தைச் சுற்றி, புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கானோர் முகாம்களில் வசிப்பதாக அது குறிப்பிட்டது.

வான்வழித் தாக்குதலை நடத்தியது யார் என்பதை ஐசிஆர்சி தெரிவிக்கவில்லை.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 22 பேரின் சடலங்களும் காயமடைந்த மேலும் 45 பேரும் அருகிலுள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும் சங்கம் கூறியது.

இந்நிலையில், இஸ்‌ரேலின் குண்டுவீச்சில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அல்-மவாசி வட்டாரத்துக்கு அருகே புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களைக் குறிவைத்து குண்டு வீசப்பட்டதாகவும் அந்தப் பகுதிக்கு அருகில்தான் ஐசிஆர்சி அலுவலகம் இருப்பதாகவும் அமைச்சு சொன்னது.

இச்சம்பவத்தில் பங்கிருப்பதாக இஸ்‌ரேலியத் தற்காப்புப் படைப் பேச்சாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் இதுகுறித்து ஆய்வு செய்யப்படுவதாக அவர் கூறினார்.

“முதற்கட்ட விசாரணையில், மனிதநேயப் பகுதியான அல்-மவாசியில் இஸ்‌ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் குறிப்பிட்டார்.

“வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐசிஆர்சி அலுவலகம், சங்கத்தினர் தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கு மிக அருகே குண்டுகள் வீசப்பட்டன. பொதுமக்களுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கை இது.“அண்மையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் இதுவும் ஒன்று,” என்று ஐசிஆர்சி கூறியது.

இஸ்‌ரேல், ஹமாஸ் என இருதரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்கக் கூடுதலாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஐசிஆர்சி தலைவர் மிர்ஜானா ஸ்போலிஹாரிக், “இது மனித நேயத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையிலான எல்லைக்கோடு,” என்று குறிப்பிட்டார்.

Exit mobile version