Site icon Tamil News

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொழில்சார் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.தம் குடும்பத்தினருடனும் அதிகாரிகள் குழுவுடனும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) இரவு அவர் சென்னையிலிருந்து துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தமது 19 நாள் பயணத்தின்போது அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அவ்வகையில், புதன்கிழமையன்று சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சென்னையிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ செல்லும் விமானத்திலும் விமான நிலையக் கழிவறைகளிலும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அன்றிரவு 8 மணிக்கு சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.ஆனால், சென்னையிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு நேரடி விமானம் ஏதும் இல்லை என்பதை அதிகாரிகள் அறிந்தனர்.

ஆயினும், முதல்வர் ஸ்டாலின் இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பும் எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று, அங்கிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ செல்லவிருந்ததால் அவ்விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர்.இதனையடுத்து, துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்திலும் விமான நிலையக் கழிவறைகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், வெடிகுண்டு எதுவும் சிக்கப்படவில்லை.

இதனால், முதல்வர் செல்லவிருந்த விமானம் சிறிது தாமதமாக, அதாவது இரவு 10.16 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.முதல்வர் பயணத்தின்போது பீதியைக் கிளப்பும் நோக்கில் வெடிகுண்டு மிரட்டல் புரளி விடுக்கப்பட்டிருக்கலாம் என விசாரணை மூலம் தெரியவந்தது.

இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் கணினி அடையாள எண்ணையும் வைத்து, மிரட்டல் விடுத்தவரை அடையாளம் கண்டு கைதுசெய்யும் முயற்சியில் சென்னை இணையக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு மாதங்களில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த 11ஆவது வெடிகுண்டு மிரட்டல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மிரட்டல் விடுப்போரைப் பிடிக்க சென்னை விமான நிலையக் காவல்துறை சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

Exit mobile version