Tamil News

பிக்பாஸ் சீசன் 8 – திகதி நேரம் எல்லாம் குறிச்சாச்சு

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை தற்போது பிக்பாஸ் தரப்பு, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை, 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமலஹாசன் தான்.

உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். திரைப்பட பணிகள் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக இவர் அறிவித்திருந்தாலும், அமெரிக்கா சென்று ஏ ஐ டெக்னாலஜி குறித்து கமலஹாசன் படிக்க உள்ளது தான் பிக்பாஸை விட்டு விலக முக்கிய காரணம் என கூறப்பட்டது.

கமல்ஹாசன் விலகிய பின்னர் ஒரு வழியாக நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இது குறித்து விஜய் சேதுபதி தோன்றும் புதிய ப்ரோமோ ஒன்றை பிக்பாஸ் தரப்பு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் அனைவருமே முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் அவ்வப்போது சில பிரபலங்களின் பெயர்கள் யூகங்கள் அடிப்படையில் வெளியாகி வருகிறது. அதே போல் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி 60 லட்சம் சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version