Tamil News

மட்டக்களப்பு – தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் ; சிரமங்களுக்கு ஆளான நோயாளர்கள்

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இன்று காலை இலங்கையில் உள்ள பத்து வைத்தியசாலைகளில் 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

இதன்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் தொழிற்சங்கங்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வைத்தியசாலையில் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.வைத்தியசாலையில் கடமையில் உள்ள பல்வேறு பிரிவினரும் நான்கு மணி நேரம் கடமைக்கு செல்லாமல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.இன்றைய தினம் தமது நியாயமான கோரிக்கைக்கு சாதகமான பதில்கள் வழங்காவிட்டால் நாளை முதல் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதன்காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு சுகாதார அமைச்சும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த போராட்டங்கள் காரணமாக நீண்டதூரத்திலிருந்து கிளினிக் மற்றும் சிகிச்சைகளுக்காக வந்த நோயாளர்கள் மருந்துகளைப்பெறுவதற்கு நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலையேற்பட்டது.தற்போது நோன்பு காலம் என்ற காரணத்தினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version