Tamil News

மட்டக்களப்பு: மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள்- வனஜீவராசிகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக நீர்நிலைகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதன் காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வழியும் நிலை காணப்படுவதன் ஆறுகள் வாவிகள் பெருக்கெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் குளங்கள்,வாவிகள்,ஆறுகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் அதேநேரம் கால்நடைகளைகளையும் பிடித்துச்செல்லும் நிலைமை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதியில் அதிகளவான மக்கள் வாழும் பகுதிக்குள் இன்று காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதேபோன்று நேற்று மாலை திருப்பழுகாமம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச்சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த முதலை மாட்டை பிடித்து ஆற்றுப்பகுதிக்குள் இழுத்துச்சென்றதாகவும் மக்கள் தெரிவிப்பதுடன் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் குளங்கள்,வாவிகள்,ஆறுகள்,நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version