Site icon Tamil News

இலங்கை தேர்தல் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கொழும்பு, நுகேகொடை, கொட்டாவை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசார கூட்டங்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் மருதானை டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக் கூட்டம், கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் கூட்டம் நுகேகொடை ஆனந்த சமரகோன் கலையரங்க வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் பிலியந்தலை சோமவீர விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

எனவே, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் இடங்களை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்வதற்காக, மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

அத்துடன் குறித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version