Tamil News

அயலான்.. நான்காம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ந் தேதி வெள்ளிக்கிழமை வெளிவந்த படங்களில் ஒன்று அயலான். இத்திரைப்படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.

சத்யஜோதி தியாகராஜன் தயாரித்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர் .ஏலியனை மையமாக கொண்டு உருவாகி உள்ள இப்பட்டம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு போராட்டத்திற்கு பின் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அயலான் படத்தின் நான்காம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அயலான் படம் முதல் நாளில் 3.2 கோடி ரூபாய் வசூலானது. அதேபோல், இரண்டாவது நாள் 4.35 கோடி ரூபாயும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 5.15 கோடியை வசூலித்தது. நான்காம் நாளான நேற்று அயலான் படம் 6.75 கோடி வசூலை அள்ளி உள்ளது. படம் வெளியான முதல் நாளில் படத்தின் வசூல் குறைவாக இருந்த நிலையில், படிப்படியாக அயலான் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது.

இதனடிப்படையில் நான்கு நாட்களில் படத்தின் மொத்த வசூல், 19.45 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்து வரும் நாட்களும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில கலவையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது இருந்தாலும் கூட, குடும்ப ரசிகர்களுக்கு இப்படம் பிடித்துவிட்டது. குறிப்பாக குழந்தைகள் அயலான் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

 

Exit mobile version