Site icon Tamil News

ருமேனியாவிற்கு அனுப்புவதாக கூறி 2 மில்லியன் மோசடி செய்த பெண் கைது!

ருமேனியாவில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக கூறி மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 2 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முன்னர் இதேபோன்ற குற்றத்திற்காக SLBFE ஆல் கைது செய்யப்பட்டவர் என்பதும் பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய கைது தொடர்பில் அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இவ்வாறான மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக பணம் கோரும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version