Tamil News

92 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களை மீண்டும் எச்சரித்துள்ள ஆப்பிள் நிறுவனம்!

92 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்கள், உளவு பார்க்கப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று மீண்டும் எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள NSO குழுமம் தயாரித்த பெகாசஸ் உள்ளிட்ட உளவு மென்பொருள் மூலம் ஐபோன்கள் ஊடுருவப்படலாம் என ஆப்பிள் தனது ஐபோன் பயனர்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது.

அரசு ஆதரவுடன் ஸ்பைவேர் தாக்குதல் நடத்தப்படலாம் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு இதேபோன்ற எச்சரிக்கைகளை ஆப்பிள் அனுப்பியது. இருப்பினும், எந்தவொரு குறிப்பிட்ட உளவு தகவலையும் அந்நிறுவனத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என பின்னர் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஆப்பிள் தனது ஐபோன் பயனர்களுக்கு மீண்டும் ஒரு உளவு அபாய எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.யாரையும் குற்றம்சாட்டாமல் இந்த எச்சரிக்கை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இத்தகவல் எத்தனை பேருக்கு சென்றடைந்துள்ளது என தெளிவான தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.

Apple warns about possible 'mercenary spyware' attack for users in India,  91 other nations - BusinessToday

அந்த எச்சரிக்கை மின்னஞ்சலானது ‘அலர்ட்: ஆப்பிள் உங்கள் ஐபோனுக்கு எதிராக குறி வைக்கப்பட்ட கூலி உளவு மென்பொருள் தாக்குதலைக் கண்டறிந்துள்ளது’ என்ற தலைப்பில் அனுப்பியுள்ளது. அந்த தகவலில், ‘இத்தகைய தாக்குதல்கள் அரிதானவை மற்றும் மிகவும் அதிநவீனமானவை. அதிக செலவில் ஒரு சிலரை மட்டுமே குறிவைக்கின்றன.

எனவே அறிமுகம் இல்லாத அனுப்புநர்களிடமிருந்து வரும் இணைப்புகள் (லிங்குகள்) குறித்து பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆப்பிள் இந்த எச்சரிக்கையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. தயவுசெய்து இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

உளவு பார்க்கப்படும் அபாயம் உள்ள பயனர்களுக்கு உதவ, ஆப்பிள் உதவிக்கான வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version