Site icon Tamil News

இலங்கை அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அனுர அணியின் இந்திய பயணம்

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி குழுவின் இந்திய பயணம் கொழும்பு அரசியலில் பெரும் பதற்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களை ஏன் இந்தியா அழைத்தது? என்ற கேள்விகள் அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் விடுதலை முன்னணியின் இந்திய பயணம் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட ஆளும் கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் இந்த பயணத்தால் பதற்றமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அடுத்து வரும் தேர்தல்களில் ஜே.வி.பி வெற்றியடையலாம் என்ற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் இவர்களின் வெற்றி உறுதியானது என்பனாலா இந்தியாஇவர்களை அழைத்து கலந்துரையாடுகின்றது என்று அரசியல் கட்சிகள் கேள்வியெழுப்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் அனுரகுமார திஸாநாயக்கவை கொழும்பில் சந்தித்துள்ளதுடன், இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகரும் பதவியேற்று வந்ததும் அனுரகுமாரவை சந்தித்திருந்தார். அத்துடன் சீனத் தூதுவரும் அவரை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்புகளின் பின்னால் ஜேவிபியை தமக்கு சார்பாக கொண்டுவரும் திட்டங்களும் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் இந்தியாவால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பையேற்று அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழு இந்தியாவுக்கு சென்றுள்ளதுடன், அங்கு சில தினங்களுக்கு தங்கியிருந்து அரச உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version