Tamil News

அன்பே வா படத்திற்கு எம்ஜிஆர் அந்த காலத்திலேயே எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கார் தெரியுமா?

எம்.ஜி. ராமச்சந்திரன் பீக்கில் இருந்த நேரம் அவர்தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் என்பார்கள்.

ஆனால், அந்தக்காலகட்டத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர்களைக் கேட்டால், எழுபதாயிரம் எண்பதாயிரம்தான் அவரது சம்பளம் என்பார்கள். இதற்கு மாறாக அன்பே வா படத்துக்கு மிகப்பெரிய தொகையை எம்ஜி ராமச்சந்திரன் சம்பளமாகப் பெற்றார்.

ஏ.சி.திருலோசந்தர் ஹாலிவுட்டின், கம் செப்டம்பர் (1961) படத்தைத் தழுவி ஒரு கதையை எழுதினார். நாயகனாக எம்ஜி ராமச்சந்திரனை மனதில் வைத்து எழுதிய அந்தக் கதையில், எம்ஜி ராமச்சந்திரனின் வழக்கமான படங்களில் இடம்பெறும் சென்டிமெண்ட் காட்சியோ, அடிதடியோ இல்லை.

எனினும், கதையை கேட்டதும் எம்ஜி ராமச்சந்திரன் நடிக்க ஒப்புக் கொண்டார். ஏவிஎம் படத்தைத் தயாரித்தது. அதுதான் அன்பே வா திரைப்படம்.

அதுவரை ஏவிஎம் வண்ணப் படத்தைத் தயாரித்ததில்லை. ஏவிஎம்மின் முதல் வண்ணப் படமாக ஈஸ்ட்மென் கலரில் அன்பே வா எடுக்கப்பட்டது. இந்தப் படத்துக்காக மொத்தம் 72 நாள்கள் கால்ஷீட் தந்தார் எம்ஜி ராமச்சந்திரன். இதற்கு 3 லட்சம் சம்பளம் அவர் கேட்க, மறுப்பேச்சில்லாமல் அதற்கு ஏவிஎம் சரவணன் ஒத்துக் கொண்டார். படம் சிம்லா மற்றும் ஊட்டியில் தயாரானது.

ஏவிஎம் நிறுவனம் ஸ்கிரிப்ட் தயாரான பிறகே நடிகர்களை தேர்வு செய்வார்கள். முதல்முறையாக நடிகரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையை தயாரித்தது.

நாயகியாக ஜெயலலிதாவையும், அவரது தந்தையாக கே.ஏ.தங்கவேலுவையும் நடிக்க வைக்க எம்ஜி ராமச்சந்திரன் விரும்பினார்.

இரண்டும் ஏவிஎம்மால் நிராகரிக்கப்பட்டு சரோஜாதேவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏவிஎம் நிறுவனத்துடன் ஆதிகாலம் முதல் நட்பில் இருந்த டி.ஆர்.ராமச்சந்திரன் நாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். மூன்று ஒளிப்பதிவாளர்கள் படத்தில் வேலை பார்த்தனர்.

அன்பே வா படம் இறுதிக்கட்டத்தை நெருங்குகையில் மேலும், 25 ஆயிரம் ரூபாய் வேண்டும் என எம்ஜி ராமச்சந்திரன் கேட்க, அதுவும் தரப்பட்டது. அப்படி அன்பே வா படத்துக்கு மொத்தமாக 3.25 லட்சங்கள் சம்பளமாக எம்ஜி ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். ஏவிஎம் சரவணன் எம்ஜி ராமச்சந்திரனுக்கு சம்பளமாக 3.25 லட்சங்களை சம்பளமாகக் கொடுத்ததை தனது புத்தகத்தில் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version