Site icon Tamil News

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் பரபரப்பு தகவல் வெளியிட்ட ஊழியர்

உலகம் முழுவதும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் செல்வது பாதுகாப்பானது அல்ல என முன்னாள் ஓஷன்கேட் ஊழியர் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் கப்பலை சுற்றிப்பார்க்க, கடலுக்கு அடியில் டைட்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் 5 பணக்காரர்கள் பயணம் செய்தனர்.

இந்த பயணம் தொடங்கிய ஒரு மணிநேரம் 45 நிமிடங்களில், நீர்மூழ்கிக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் தேடும் பணியில் அமெரிக்கக் கடலோரக் காவல்படை தீவிரமாக ஈடுபட்டது.

அந்த தேடுதலின்போது கடலுக்கடியில் நீர்மூழ்கிக்கப்பலின் சில நொறுங்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, டைட்டனில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்டனர் என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களை அட்லாண்டிக் கடலின் ஆழத்திலிருந்து அமெரிக்க கடற்படையினர் மீட்டனர்.

மீட்கப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலின் சிதைந்த பாகங்களில் இருந்து அமெரிக்க கடலோர காவல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மனித உடலின் சிதைவுகள் அமெரிக்க மருத்துவ வல்லுநர்களால் ஆய்வு செய்யப்படுகிறது.

இந்த விபத்து குறித்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் புலனாய்வாளர்கள் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் செல்வது பாதுகாப்பானது அல்ல என முன்னாள் ஓஷன்கேட் ஊழியர் டேவிட் லோக்ரிட்ஜ் தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து கூறியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் நிறுவனத்தின் முன்னாள் கடல் நடவடிக்கை இயக்குநராகவும், நீர்மூழ்கிக் கப்பல் தலைமை விமானியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version