Tamil News

அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது! சீமான் ஆவேசம்

சட்டப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ் என்றும் வாழும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிஞர் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்டப் புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைப்பதைத் தவிர்ப்பதை ஏற்க முடியாது.

இந்த நாட்டின் நீதிமன்றங்களில் அமர அண்ணல் அம்பேத்கரை விட வேறு யார் தகுதியானவர்? சென்னை உயர்நீதிமன்ற பதிவரின் இந்த அறிக்கை, சட்ட மேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் இருந்து அகற்றும் திட்டமிட்ட சதி என்று தோன்றுகிறது.

புரட்சியாளர் அம்பேத்கரின் புகழ் சட்டப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பு வார்த்தைகளிலும் வாழ்கிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்த அரசியல் சட்டத்தின் ஆட்சி இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த மண்ணில் வாழ்வார்.

எத்தனை முயற்சிகள் செய்தாலும், சூழ்ச்சிகள் செய்தாலும் அண்ணல் அம்பேத்கரின் பெயரையும் புகழையும் யாராலும் மறைக்க முடியாது.

எனவே, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை வைக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றப் பதிவுத் துறையின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். என்றார்.

Exit mobile version