Site icon Tamil News

யாழ். சர்வதேச விமான நிலையம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தியா மற்றும் கொழும்பு இடையேயான பயணிகள் சேவைகள் இடம்பெற்று வருவருதுடன் பெருமளவானவர்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய விமான நிலையத்தில் விமானம் ஊடாக வருபவர்களை அழைத்து வர செல்பவர்கள் காத்திருப்பதற்கான இடம் மர நிழலேயாகும். மரங்களுக்கு கீழே கல்லாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் அவை பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மாரி காலத்தில் மழை பெய்தால் கல்லாசனங்களில் இருக்க முடியாது பெரும் சிரமத்திற்கு ஆளாகுவர்.குறிப்பாக பயணிகள் குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளை முடித்து விட்டு காத்திருப்பிற்கான போதிய இடம் இல்லாமல் அவர்களும் இதே பிரச்சினையை முகம்கொடுப்பர்.

தற்போது மாரி காலம் ஆரம்பிதுள்ள நிலையில் விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்திய பிரபலங்கள் அதிகம் பேர் வருகை தருகின்றனர்.இவ்வாறான நிலையில் ஒரு சில உட்கட்டுமான அடிப்படை வசதிகளையாவது ஏற்படுத்துவது பயணிகள் மற்றும் விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்,இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை ஆகியோர் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

Exit mobile version