Site icon Tamil News

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் அஜித்… உறுதி செய்த பிரபலம்

நீண்ட நாள் கழித்து நடிகர் அஜித் பொது வெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் தற்போது வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகத்திலும் அதே சமயம் அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழ் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. ’கலைஞர் 100’ எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24ம் திகதி ஞாயிறன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினி, கமல், அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், இசையமைப்பாளர் இளையராஜா என இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், ‘கலைஞர் மு.கருணாநிதி திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக அவர் எழுபத்து ஐந்து படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார். நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் படத்தலைப்பு வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து உதவினார். அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் பாதி கட்டணம் என்று அறிவித்தார். மேலும், திரைப்பட மானிய தொகையினை வருடந்தோறும் வழங்கினார். ஐந்து முறை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார்.

தனது வசனத்தால் மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டார். அவர் வசனம் எழுதிய ஒவ்வொரு படத்தின் துவக்கத்திலும் அவர் பேசும் பேச்சை கேட்கவே திரையரங்கு நோக்கி ஏராளமான மக்கள் வந்தார்கள். அகில இந்திய அளவில் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா, குஜராத்தி என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.

கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம். இந்த விழாவை ஒட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொள்வார்கள் என பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். நீண்ட நாள் கழித்து சினிமா சார்ந்த நிகழ்வு ஒன்றில் நடிகர் அஜித் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற விஷயம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது

Exit mobile version