Site icon Tamil News

இஸ்ரேல் போர் பதற்றம் : விமான சேவை ரத்து- ஏர் இந்தியா அறிவிப்பு

இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் நேற்று காலை நடத்திய தாக்குதலால் இஸ்ரேலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பல உயிரிழப்பும் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்திருப்பதாக அறிவித்த இஸ்ரேல், “ஹமாஸ் அமைப்பு தனது செயலுக்கான விலையை கொடுக்க போகிறது” என எச்சரித்து போரை தீவிரமாக்கியுள்ளது.

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நிலையை எடுத்திருக்கும் அதே சமயம் ஈரான் உட்பட பல அரபு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார். பல வருடங்களாக இஸ்ரேலிற்கு கல்வி, பணி மற்றும் சுற்றுலாவிற்காக இந்தியர்கள் சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் அதிகரிக்கும் போர் பதற்றத்தின் காரணமாக இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு விமான சேவையை வழங்கி வந்த டாடா குழுமம் இயக்கும் ஏர் இந்தியா, வரும் அக்டோபர் 14 வரை பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவினரின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு இந்திய-டெல் அவிவ் இருவழி விமான சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இப்போது ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களுக்கான முன்பதிவுகளை உறுதி செய்த பயணிகளுக்கு விமான நிறுவனம் அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 100 இஸ்ரேலியர்கள் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், பாலஸ்தீனிய அதிகாரிகள் இறந்தவர்களின் எண்ணிக்கை 200க்கு மேல் இருக்கும் என கணித்துள்ளனர்.

Exit mobile version