Site icon Tamil News

மாஸ்கோவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்

இந்தியாவிலிருந்து பிரிட்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, செப்டம்பர் 4ஆம் திகதி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாஸ்கோவில் அவசரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியிலிருந்து பர்மிங்ஹாம் சென்றுகொண்டிருந்த அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகக் கூறப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அது தரையிறக்கப்பட்டதாக ஷெரிமெட்யெவோ விமான நிலையம் தெரிவித்தது.

அந்த போயிங் 787-800 வகை விமானத்தில் பயணிகள் 258 பேரும் சிப்பந்திகள் 17 பேரும் இருந்தனர். அவர்களில் யாருக்கும் காயமேற்படவில்லை.மாஸ்கோ நேரப்படி இரவு 9.35 மணிக்கு அது புறப்படும் எனக் கூறப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தரையிறங்கியது. விமானத்தின் சரக்குப் பகுதியில் பிரச்சினை கண்டறியப்பட்டதால் அது அவ்வாறு அவசரமாகத் தரையிறங்கியது.

2023 ஜூன் மாதம் டெல்லி-சான் ஃபிரான்சிஸ்கோ பாதையில் சேவை வழங்கிய ஏர் இந்தியா போயிங் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் ஒரு நாள் சிக்கித் தவித்தனர். பின்னர் நிறுவனம் மாற்று விமானத்தின் மூலம் அவர்களை அழைத்துச்சென்றது.

Exit mobile version