Tamil News

வயது 120- கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிகவும் வயதான நபர்!

கேரள மாநிலத்தை சேர்ந்த குஞ்சீரும்மா என்ற 120 வயது பெண்மணி, உலகின் மிகவும் வயதான நபர் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

குஞ்சீரும்மாவின் ஆதார் அடையாள அட்டை ஆவணத்தின் அடிப்படையில், அவருக்கு கடந்த ஜூன் மாதம் 120 வயதாகி உள்ளது. இதனையடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் குஞ்சீரும்மா இடம் பிடித்திருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரன்யாஸ் என்ற 116 வயது பெண்மணியின் சாதனையை கேரள குஞ்சீரும்மா முறியடித்திருக்கிறார்.

கேரளத்தின் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 14 வயதில் திருமணமாகி, 13 குழந்தைகளை பெற்றெடுத்தவர். அவர்களில் 7 குழந்தைகளை அல்பாயுசில் பறிகொடுத்திருக்கிறார்.

மிச்சமிருந்த குழந்தைகளை அரும்பாடுபட்டு வளர்த்ததில், ஆல்போல் தழைத்து அடுத்தடுத்து வாரிசுகள் தலையெடுத்ததில், இன்று 5ம் தலைமுறையையும் அரவணைத்து நிற்கிறார் குஞ்சீரும்மா.

கேரளத்தின் பாரம்பரிய முழுதானிய உணவு, முழு உழைப்பு, முழுமையான உறக்கம் ஆகியவையே குஞ்சீரும்மா 120 வயதை எட்டியிருப்பதற்கு அடிப்படை.

இதன் பலனாக இந்த கின்னஸ் சாதனை பாட்டிக்கு, இன்று வரை காது, கண் உள்ளிட்ட புலன்கள் சரியாக வேலை செய்வதுடன், வயதானவர்களை தாக்கும் நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகளும் அவரை எட்டியபாடில்லை. முதுமை காரணமாக தற்போது சக்கர நாற்காலியில் வலம் வரும் குஞ்சீரும்மா, தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் பின்னணியில், இளம் வயதில் பெரியவர்களால் கற்றுத் தரப்பட்ட இஸ்லாமிய மார்க்க கல்வியையும் ஒரு காரணமாக தெரிவிக்கிறார்

 

Exit mobile version