Site icon Tamil News

நஸ்ரல்லாவின் இறப்பை அடுத்து ஹிஸ்புல்லாக்களின் அடுத்த தலைவராகும் ஹஷேம் சஃபிதீன்

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ​ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார்.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சஃபிதீனும் கொல்லப்பட்டத்தாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உருவ ஒற்றுமையில் நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா அமைப்பில் ஆரம்பம் முதலே இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். தெற்கு லெபனானின் டெய்ர் குன்னுன் அல் நஹ்ரில் 1964-ம் ஆண்டு பிறந்த ஹஷேம் சஃபிதீன், ஈரானில் தனது படிப்பினை முடித்தார். அதன் பின்பு 1990-ம் ஆண்டு அவர் மீண்டும் லெபனானுக்கு அழைக்கப்பட்ட போது அவர் நஸ்ரல்லாவின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட சஃபிதீன், ஹிஸ்புல்லாக்களின் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடுபவராக செயல்பட்டார். அக்குழுவின் ஜிகாத் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கொல்லப்பட்ட ஈரானிய இராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியின் மகள் ஜீனாப் சுலைமானியின் மாமனார் என்ற முறையில் ஈரான் அரசுக்கு நெருக்கமானவராக சஃபிதீன் இருக்கிறார். இதனிடையே, சிரியாவை ஆதரித்ததற்காக சவுதி அரேபியாவால் இவர் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டார்.

ஹிஸ்புல்லாக்களின் நிர்வாக சபையின் தலைவராக இருந்த ஹஷேம் சஃபிதீன் அந்த அமைப்பின் அரசியல் விவகாரங்களைக் கவனித்து வந்தார். அதேபோல் ஹிஸ்புல்லாக்களின் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளைக் கவனித்து வந்த ஜிகாத் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாக்களின் கல்வி மற்றும் நி்திச்செயல்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை சஃபிதீன் மேற்பார்வையிட்டு வந்தார். இதனிடையே, ஹில்புல்லாக்களின் ராஜாங்க விஷயங்களை நஸ்ரல்லா கவனித்து வந்தார்.

Exit mobile version