Site icon Tamil News

இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை!

இறக்குமதி தொடர்பான முழுமையான அறிக்கையை இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மைத்தினால் நேற்று (19.06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்படி கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “இறக்குமதிக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் போது ரூபாவின் பெறுமதியில் தளம்பல் நிலைமை ஏற்படும்.

எனவே ரூபாவின் பெறுமதியை தொடர்ந்தும் சிறந்த மட்டத்தில் பேணுவதற்காக இறக்குமதி தளர்வுகள் மேற்கொள்ளப்படும் அதே வேளை ,  ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இவ்வாண்டு முதலாம் காலாண்டில் இறக்குமதி 28 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது இவ்வாறான நிலைவரங்கள் ஏற்படும்.

தற்போது சுமார் 900 பொருட்களுக்கான இறக்குமதித் தடை தொடர்ந்தும் காணப்படுகிறது. இவற்றில் 300 பொருட்கள் வாகனங்களுடன் தொடர்புடையவையாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அமைய மேற்கூறப்பட்ட காரணிகளையும் கவனத்தில் கொண்டு இறக்குமதியில் தளர்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Exit mobile version