Tamil News

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தை இயங்க வைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்திற்கு இரண்டாம் கட்ட நிதியாக 90 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் ,எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக மத்திய பேருந்து நிலையம் இயங்க நேற்றைய கள விஜயத்தின் போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் முதலாம் கட்ட வேலைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்ட போதிலும் இதுவரை காலமும் மத்திய பேருந்து நிலையம் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதிக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வந்ததன் பிரகாரம் இரண்டாம் கட்டமாக 90 மில்லியன் நிதியை ஒதுக்கீடு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், பிரதேச செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், உள்ளூராட்சி அதிகாரசபை, கரைதுறைப்பற்று பிரதேச சபை, தனியார் போக்குவரத்து மற்றும் அரச போக்குவரத்து சபையினர் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version